மங்களமும் மகிழ்ச்சியும் பொங்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

0 2666
தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி, வண்ண வண்ண கயிறுகள், சலங்கைகள் கட்டி, புதிய பானைகளில் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து விவசாயிகள் வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளடிச்சிவிளை பகுதியில் வீடுகளில் மாடுகளுக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்து பொங்கலிட்டு வழிபட்டனர்.

சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் பசுவுக்கும் கன்றுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்து பூஜைகள் நடைபெற்றன.

தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ சாலை ஒன்றில் 100 க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய் கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விவசாயம் செழித்து, விவசாயிகளின் வாழ்வு வளம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடியிலுள்ள கோ சாலை ஒன்றில் மாடுகளை குளிப்பாட்டி, ராஜ அலங்காரங்கள் செய்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்து ஆண்களும் பெண்களுமாக வழிபட்டனர்.

புதுக்கோட்டையில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்காரங்கள் செய்து, பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் மாடுகளுக்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் பாண்டுரங்கனார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோ சாலையில் நூற்றுக்கணக்கான பசுக்களுக்கு ஒரே நேரத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த கோ சாலையில் 800க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ சாலைக்கு வந்த பக்தர்கள், மாடுகளை அலங்கரித்து, உணவு, பழங்கள் வழங்கி பூக்கள் தூவி, மந்திரங்கள் முழங்க பூஜை செய்து வழிபட்டனர்.

மாட்டுப் பொங்கலை ஒட்டி, தஞ்சை பெரியக் கோயிலில் எழுந்தருளிய நந்தியம் பெருமானுக்கு சுமார் 500 கிலோ எடைகொண்ட காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments