ஆரவாரம் காட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
பொங்கல் திருநாளை ஒட்டி, விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி 2 வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர். 520 காளைகளும், 430 காளையர்களும் பங்கேற்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் காளைகளும் போட்டியில் களமிறங்கின.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்தளவு பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவிழ்த்துவிடப்பட்ட 2 காளைகளும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தண்ணீ காட்டிச் சென்றது.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
காளைகளின் கொம்பை பிடிக்க முயன்ற வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி வெளியேற்றப்பட்டார். மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பல காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளை, மாடுபிடி வீரர் ஒருவரை குத்தி தூக்கி வீசியது.
காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்கும் தனது காளையை 2 வயது சிறுமி களத்திற்கு அழைத்து வந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
8 சுற்று முடிவில் 26 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்யும், முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசும் முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு இருவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் நிறுவனர் ஜி.ஆர். கார்த்தியின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. காளையின் பெயர் வேலு. உரிமையாளருக்கு பைக்கும், பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.
18 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி என்ற மாடுபிடிவீரர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.Jall
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 58 பேர் காயமடைந்தனர். இதில், 46 பேர் மாடுபிடி வீரர்கள்,
காளை உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர் 2 பேர் ஆவர்.
Comments