டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானம்.. ஓர் ஆண்டு இடைவெளியில்., மீண்டும்.!

0 4736

அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், டொனல்டு டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானம், இந்திய நேரப்படி, இன்று நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது. குடியரசு கட்சியினரே டிரம்புக்கு எதிராக வரிந்து கட்டுவதால், பதவி நீக்க கோரும் தீர்மானம் எளிதாக நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் படுதோல்வியை எதிர்கொண்டபோதும் அதை ஒப்புக்கொள்ள மறுத்தார் டொனல்டு டிரம்ப்... அவரது பிடிவாதம், உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சூழலில், அண்மையில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிடலில், டிரம்ப் ஆதரவாளர்கள், துப்பாக்கி முனையில் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டம், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் கண்டனங்களை சம்பாதித்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி, கேபினட் ஒப்புதலை பெற்று, டிரம்பை பதவியிலிருந்து நீக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. மேலும், இதன்மீது, துணை அதிபரை முடிவெடுக்க வலியுறுத்தும் தீர்மானம், மக்கள் பிரதிநிதிகள் அவையில், 223க்கு 205 என்ற பெரும்பான்மை வாக்குகளோடு, செவ்வாய்கிழமைன்று வெற்றிகரமாக நிறைவேறியது.

இருப்பினும், டிரம்ப்க்கு எதிராக, பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவர, துணை அதிபர் மைக் பென்ஸ்(Mike Pence) மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி(Nancy Pelosi), அதிபர் பதவியிலிருந்து டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில், இந்திய நேரப்படி, இன்று நள்ளிரவில் வாக்கெடுப்புக்கு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதற்குள் அவரைப் பதவி நீக்கிவிடவேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு டிரம்பின் சொந்தக் கட்சியான, குடியரசு கட்சியிலேயே சிலர் ஆதரவு தெரிவிப்பதால், அதிர்வலை நீடிக்கிறது.

முன்னாள் துணை அதிபர் டிக் செனீயின் (Dick Cheney) மகளும், மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினரான லிஸ் செனீ (Liz Cheney), ஜான் காட்கோ(John Katko), ஆடம் கின்சிங்கர்(Adam Kinzinger), பிரட் அப்டான் (Fred Upton) உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிக்கள், டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றனர்.

பதவி நீக்க கோரும் தீர்மானம் நிறைவேறினால், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான, செனட் சபையில், டொனல்ட் டிரம்ப் மீது விசாரணை நடைபெறும்.

செனட்டில் டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை ஆகும். இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். ஆனால், 20 பேர் தயாராக இருப்பதாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments