களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை ஒட்டி, பொங்கல் பானை, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது.
சென்னை திருவான்மியூர் சந்தையில் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களையும் பூஜைக்கு தேவையான மஞ்சள் கொத்து, தென்னங்கீற்று, தோரணங்கள், பூசணிக்காய், காய்கறி, கரும்பு உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து உள்ளிட்டவற்றை பொதுமக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.பூக்களின் விலை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு 200 முதல் 250 வரை விற்ற மல்லிப்பூ வரத்து குறைவால் கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
சேலம் சின்ன கடை வீதி மற்றும் முதல் அக்கரகாரம் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் குடும்பம் குடும்பமாக வந்து துணிகளை வாங்கி சென்றனர். கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் பலரும் சேலம் வந்து துணி மற்றும் பொங்கல் பொருட்களை வாங்கிச் சென்றதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை தேரடி வீதியில் பொங்கல் வைப்பதற்கு தேவையான கரும்பு, மஞ்சள், மலர்கள், பழம், தேங்காய், புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. வந்தவாசியிலும் பொங்கல் விற்பனை களைகட்டியது.
தேனியில் பகவதி அம்மன் கோவில் தெரு, சுப்பன் செட்டி தெரு, உழவர் சந்தை ,தினசரி சந்தை மற்றும் முக்கிய வீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது.
நாமக்கல்லில் காலை முதலே சாரல் மழை பெய்து வந்ததால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பொங்கல் பொருட்களின் விற்பனையும் மந்தமாகக் காணப்பட்டது.
Comments