கடலில் காற்றழுத்த தாழ்வு... மழை மேலும் வலுக்கும்..!
குமரிக்கடல் பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் மழை வலுக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இந்த சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று புயலாக மாறாது என்றும், அடுத்தடுத்த நாட்களில் கேரளா நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வருகிற 16 ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அவர் கூறியுள்ளார். குமரிக்கடல் பரப்பில் சூறாவளி காற்று வீசுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments