மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
தமிழகத்தில் கடந்த நில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பா மற்றும் தாளடி அறுவடை மூலம் 5 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் இலக்கு நிர்ணயிக்கப்படிருந்த நிலையில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் கதிர் வந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் தொடர் கனமழையால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் மண்ணோடு சாய்ந்து மீண்டும் முளைத்து வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தற்போது கதிர் முற்றி அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நிலையில் கனமழையால் பயிர்கள் மண்ணோடு சாய்ந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் திட்டக்குடியைச் சுற்றியுள்ள பெண்ணாடம், ஆவினங்குடி, கோழியூர், நெடுங்குளம், பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல்
விருத்தாசலம் ஆலடி, கொளப்பாக்கம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியிலும் சுமார் 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
Comments