தரையில் வசித்ததை விட தண்ணீரில் வாழ்ந்த காலம் அதிகம்! - விடைபெற்றார் ஆயிரத்தில் ஒருவன்

0 238619
கடற்படை வீரர் அபிலாஷ் டோமி

கடந்த 2018 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி மூன்று நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமி இந்திய கடற்படையில் இருந்து விடை பெற்றார்.

கோல்டன் குளோப் ரேஸில் சுமார் 60,000 கிலோ மீட்டர் தொலைவு கடலில் பயணித்து உலகை சுற்றி வர வேண்டும் என்பதாகும். கோட்டயத்தைச் சேர்ந்த இந்தியக் கடற்படை கமாண்டரான டோமி இந்த ரேஸில் பங்கேற்று 10 மீட்டர் நீளமே கொண்ட எஸ்.வி.துரியா என்ற குட்டிப்படகில் உலகை சுற்றிக் கொண்டிருந்தார். தரையில் வாழ்ந்த காலத்தைவிட தண்ணீரில் வாழ்ந்த காலம் அதிகம்' என்று டோமி குறித்து கடற்படையில் வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். கடந்த 2013- ம் ஆண்டு, பாய் மரப்படகில் 150 நாள்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்தவர் இவர். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இந்தியர் இவர்தான். `கீர்த்தி சக்ரா'விருதையும் பெற்றுள்ள அபிலேஷ் டோமிக்கு கோல்டன் குளோப் ரேஸில் பங்கேற்ற முதல் இந்திய மாலுமி என்ற பெருமையும் உண்டு. கோல்டன் குளோப் போட்டியைப் பொறுத்தவரை, ஜி.பி.எஸ் உள்ளிட்ட நவீன டெக்னாலஜியைப் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வழிகாட்டும் மேப்புகளை பயன்படுத்தியே கடலில் பயணிக்க வேண்டும். தகவல் தொடர்புக்கு ரேடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.image

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கோல்டன் குளோப் ரேஸ் தொடங்கியது. 84 நாள்களில் கிட்டத்தட்ட 20,000 கிலோ மீட்டர் தொலைவு டோமி கடந்திருந்தார். ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து 3,200 கிலோ மீட்டர் தொலைவில் துரியா அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. இந்த பகுதி உலகின் மிக அபாயரகமான கடல் பகுதி ஆகும். எதிர்பாராமல் புயல் உருவாக, பிரமாண்ட அலைகள் எழுந்தன. சுமார் 10 மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலையில், துரியா நிலை குலைந்து கவிழ்ந்தே போனது. படகு கவிழ்ந்தால், அதில் பயணிப்பவர்களுக்கு முதுகில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். டோமிக்கு முதுகில் பலத்த அடி பட்டது. தண்ணீருக்கு மேற்புறம் வந்து படகைப் புரட்டிப் போட்டு ஏறிக்கொண்டார். முதுகு வலி தொடர்ந்து அதிகரிக்க, அதிகரிக்க அவரால் நகர முடியவில்லை. மரண வலியில் துடித்தார். கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பச்சைத் தண்ணீர் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல்   படகில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.image

எனினும், காயம் பட்டவுடன் படகிலிருந்த ரேடியோ வழியாக பிரான்ஸில் இருந்த போட்டி அமைப்பாளர்களுக்குத் தகவல் அளித்திருந்தார். துரியா கவிழ்ந்த இடம் உலகின் கடைக்கோடியில் உள்ள ஆபத்தான பகுதி . பெரும் கப்பல்களே இந்தப் பாதையில் செல்லத் துணிவதில்லை. தேடும் பணியில் ஈடுபட்ட நீண்ட தொலைவு பயணிக்கும் இந்திய விமானப்படையின் P-8 ரக விமானம் முதன்முதலில் துரியாவைக் கண்டுபிடித்தது. பிறகு, ரீ யூனியன் தீவிலிருந்து புறப்பட்ட பிரெஞ்சு கப்பல் ஒள்று துரியா இருந்த இடத்தை அடைந்து டோமியை  மீட்டது. தாகம் தீர தண்ணீர் குடித்த பின்னரே அவரால் சற்று பேச முடிந்தது. ஆயிரத்தில் ஒருவரைத்தான் இத்தகைய ஆபத்தான கடல் பகுதியில் இருந்து மீட்க முடியுமென்று அப்போது சொன்னார்கள்.

இப்படி, மறுஜென்மம் எடுத்த அபிலேஷ் டோமி கடற்படை பணியிலிருந்து கடந்த 11 ஆம் தேதி  ஓய்வு பெற்றுள்ளார். 20 ஆண்டுகள் இந்திய கடற்படையில் டோமி பணியாற்றினார். ஆனாலும், ஓய்வுக்கு பிறகும் கோல்டன் குளோப் ரேஸில் பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார். வரும் 2022 ஆம் ஆண்டு ரேஸில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ள டோமி,  எத்தனை இன்னல்கள் வந்தாலும் 250 நாள்களுக்குள் தன்னால் கோல்டன் குளோப் ரேஸில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  , அபிலாஷ் டோமிக்கு நவ்சேனா விருது வழங்கி கவுரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments