இல்லுமினாட்டிகளையே மிஞ்சும் கியூஆனன்... பூதாகரமாகக் கிளம்பும் சதிக்கோட்பாடு!
உலகம் முழுவதும் பரவலாக முன்வைக்கப்படும் ‘சதிக் கோட்பாடு’ இல்லுமினாட்டி. இந்த இல்லுமினாட்டிகள் தான் உலகைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள் எனும் நிரூபிக்கப்படாத கோட்பாடு பல காலமாக உலவி வருகிறது. அவ்வப்போது இது பேசுபொருளாகும் பிறகும் அடங்கி விடும். இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு சதிக்கோட்பாடு அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றித் தலைதூக்கியுள்ளது. அதற்குப் பெயர் தான் கியூ ஆனன் (( QAnon )). அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியதில் பெரும்பாலானோர் கியூஆனன் கோட்பாட்டை நம்புகிறவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
2017, அக்டோபர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் இணையதளத்தில் ’கியூஆனன்’ எனும் சதிக் கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தார். இந்த கோட்பாடு , பாம்பு ஒன்று வாலை சுருட்டி இருப்பது போன்ற லோகோவையும் தயாரித்து வெளியிட்டார்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் பல நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களில் சாத்தானை வழிபடும் மேல்குடி மக்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் ஒரு ரகசிய யுத்தத்தை நடத்தி வருகிறார் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, இல்லுமினாட்டிகள் போலவே கியூஆனன் கோட்பாடும் தலைதூக்கத் தொடங்கியது. அதற்கு ஆதரவாகக் கட்டுக் கதைகள் பல டிரம்ப் ஆதரவாளர்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. உலகம் முழுவதும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், ஹாலிவுட் பிரபலங்கள் என்று பலரையும் ‘கியூஆனன்’ குழுவினர் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற மாயயையும் உருவாக்கியிருக்கின்றனர்.
இவர்களின் நம்பிக்கை இத்துடன் நிற்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தாமல், அதிகளவில் பரவவிட்டது இந்த குழுவினர் தான் என்றும் இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் உடந்தை என்றும் கியூஆனன் குழுவினர் நம்புகின்றனர். இதனால், அமெரிக்கா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கியூஆனன் குழுவினர் கருதுகின்றனர்.
கியூஆனன் தொடர்பாக பல்வேறுவிதமான புத்தகங்கள், விளக்க வீடியோக்கள் உலகம் முழுவதும் வெளிவந்து சக்கை போடு போட்டு வருகின்றன. இதற்கு ஆதரவாக பல்வேறு இணையதளங்கள், யூடியூப் சேனல்கள், ட்விட்டர் பக்கங்கள் உருவாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கியூஆனன் தொடர்புடைய 70,000 கணக்குகளை ட்விட்டர் அதிரடியாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.
இ ‘இணையதளத்தில் அச்சுறுத்தல் ஏற்படுவது மட்டுமல்லாமல் இணையத்துக்கு வெளியேயும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதால் கூறி இந்த கணக்குகளை நிரந்தரமாக முடக்கினோம்” என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்தும் அமேசான் நிறுவனமும் கியூஆனன் தொடர்புடைய பொருட்களை தங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிந்தோ அறியாமலோ, QAnon ஆதரவாளர்கள் வெளியிட்ட ட்வீட்டை சிலமுறை மறு ட்விட் செய்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் அவரது மகன் எரிக் டிரம்ப் இன்ஸ்டாகிராமில் ஒரு QAnon நினைவுச் சின்னத்தை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!
Comments