சிக்கன் ரைசுக்கு காசு கொடுக்க முடியாது..! அமித்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என மிரட்டிய பாஜக பிரமுகர்

0 18485
சிக்கன் ரைசுக்கு காசு கொடுக்க முடியாது..! அமித்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என மிரட்டிய பாஜக பிரமுகர்

சென்னை திருவல்லிக்கேணியில், சாப்பிட்ட சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க மறுத்த பாஜக பிரமுகர் ஒருவர், அமீத்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என்று மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

சென்னை திருவல்லிகேணி முத்தையா தெருவில் உள்ள பாஸ்ட் புட் கடை ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞன் ஒருவன் காசு கொடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டான். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம், தன்னை பாரதீய ஜனதா கட்சியின் பகுதிச் செயலாளர் எனக்கூறி அலப்பறை செய்தான்.

சாப்பிட்ட சிக்கன் ரைஸுக்கு காசு கேட்டால் மதக்கலவரம் வரும் என்று போலீஸ் முன்பே முறுக்கிய அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினர், அவனை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அருகில் நின்ற தனது நண்பரை இந்து முன்னணியைச் சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்த அந்த குடிகார இளைஞன், அங்கிருந்து செல்ல அடம் பிடித்து பாஸ்ட் புட் கடைக்காரருடன் வலியச் சென்று வம்பிழுத்துக் கொண்டு இருந்தான்.

போகிற போக்கில் அடித்து விடுவது போல திடீரென்று அமீத்ஷா பி.ஏவுக்கு போன் போடட்டா, 100 பேர் தயாரா இருக்காங்க என்று மீண்டும் மிரட்டல் விடுத்த அந்த அரை போதை ஆசாமி ஒருவழியாக அங்கிருந்து தனது கூட்டாளியுடன் புறப்பட்டுச் சென்றான். இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசிச் சோறுக்காக எந்த லெவலுக்கும் இறங்கும் தொண்டர்களால், அவர்களுக்கு மட்டுமல்ல சம்பந்தப்பட்ட கட்சிக்கும் தலைக்குனிவு என்பதை அரசியல் கட்சியினர் எப்போது உணர போகின்றனர் ?

இந்த நிலையில் போலீஸ் முன்னிலையிலேயே கட்சிப் பெயரைக் கூறி தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலானதைத் தொடர்ந்து பாஜக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கரும் பகுதி செயலாளர் புருஷோத்தமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments