மாற்றுத்திறனாளி அரசு ஊழியருக்கு ஆப்படித்த பெண் வி.ஏ.ஓ..! ஏமாத்தாதீங்க சார்..!
தூத்துக்குடியில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஒருவர், கூலிவேலைபார்ப்பதாக கூறி அரசின் 1500 ரூபாய் உதவி தொகையை பெறுவதற்கு போலியான ஆவணங்களை கொடுத்து பெண் வி.ஏ.ஓவிடம் சிக்கிக் கொண்டார்.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்துக் கொண்டு அன்றாடம் காய்ச்சி என வேசம் கட்டியவரை, வார்த்தைகளால் காய்ச்சி எடுத்த வீரப்பெண் வி.ஏ.ஓ குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபம் பிரேமலதா என்பவர் தான் தனது நேர்மையான நடவடிக்கையினால் மக்கள் மத்தியில் வீரப்பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார்..!
தமிழக முதல் அமைச்சரின் புகார் பிரிவுக்கு ஊனமுற்றோர் உதவி தொகையான 1500 ரூபாய் கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி ஒருவரின் விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதாவின் கவனத்திற்கு வந்தது.
அந்த மனு குறித்து நேரடியாக சென்று விசாரித்த போது அந்த விண்ணப்பத்தில் தெரிவித்தப்படி அந்த நபர் கூலித்தொழிலாளி இல்லை என்பதை கண்டறிந்தார்.
சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும் அவரது மனைவி ஓய்வு பெற்ற துணை பிடிஓ என்பதையும் கண்டறிந்தார்.
ஓய்வூதியமாக மட்டும் 30 ஆயிரம் ரூபாய் வரை அரசிடம் இருந்து பெற்று வருவதும், அவரது மனைவிக்கு கிடைக்கும் பெண்சன் தொகை அதைவிட அதிகம் என்பதும் தெரியவந்தது.
இதையெல்லாம் விட அவர்கள் வசிக்கின்ற வீடு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா என்பதையும் கண்டுபிடித்தார்.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் செல்போன் மூலம் விசாரித்த போது தன்னை ஜவுளிக்கடை ஊழியர் என்று கூறி முன்னுக்குப்பின் முரணாக வேசம் கட்டினார்.
அவர் கூறிய பொய்கள் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட வி.ஏ.ஓ பிரேமலதா, தான் விசாரித்ததில் கிடைத்த உண்மைகளை ஒவ்வொன்றாக கூறி பேராசை பிடித்த அந்த மாற்றுத்திறனாளி அரசு ஊழியரின் நடு மண்டையில் உரைக்கின்ற வார்த்தைகளால் நச்சென்று கொட்டினார்..!
தான் மட்டும் அல்ல தன்னுடன் பணிபுரிந்த மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் எல்லோரும் இது போன்ற போலியான ஆவணங்கள் கொடுத்து ஊனமுறோர் உதவி தொகை பெறுவதாக ஒப்புக் கொண்டார் அந்த சீட்டிங் முன்னாள் அரசு ஊழியர்..!
ஒரு கட்டத்தில் ஆவேசத்தின் உச்சிக்கு சென்ற வி.ஏ.ஓ பிரேமலதா, இது போன்று அரசு பணத்தை மோசடியாக பெறும் அத்துனை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பகிரங்க எச்சரிக்கை விடுத்ததோடு, நேர்மையான அறிக்கையை சமர்ப்பிப்பேன் என்று அறத்தின் பக்கம் நின்று அக்னியாய் எச்சரித்தார் பிரேமலதா
தூத்துக்குடியை சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் எத்தனை பேர் போலியான ஆவணங்களை கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிதொகையை தட்டிப்பறிக்கின்றனர் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம்..!
பணியில் இருக்கும் போது பலவழிகளில் பணம் கொட்டுகிறது, பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமாக பணம் கொட்டுகிறது..!
இதுவும் போதாதென்று மோசடியாக உதவித்தொகையும் சேர்த்துக் கேட்டால் அரசு பணி இல்லாமல் அன்றாடம் காய்ச்சியாய் உழைத்து வாழ்க்கையை ஓட்டும் கோடான கோடி ஏழை மக்களின் நிலை என்ன ? என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது.
Comments