மாஸ்டர் படத்துக்காக திரையரங்குகள் செய்யும் அடாவடி அட்ராசிட்டிகள்.. ஒருவருக்கு டபுள் கட்டணம்..!

0 12307

மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் காண பெரும்பாலான ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், திரையரங்கிற்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் என்ற பெயரில் திரையரங்கு உரிமையாளர்கள் அடாவடியாக பலமடங்கு கட்டணத்தை வசூலிப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்...

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒரு வழியாக திரையரங்குகளை தொட்டுவிட்டது நடிகர் விஜய்யின் மாஸ்டர்..!

இணையத்தில் மாஸ்டர் பட காட்சிகள் துண்டு துண்டாக லீக் செய்யப்பட்ட நிலையில் அதனை வெளியிட்டதாக சோனி நிறுவன ஊழியர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு பதில் அரசின் உத்தரவை மீறி 100 சதவீத பார்வையாளர்களுக்கு டிக்கெட் வழங்கியதோடு ஒரு டிக்கெட்டுக்கும் பலமடங்கு தொகையை கட்டணமாக வசூலிக்க தொடங்கி உள்ளனர் சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள்..!

இவர்களுக்கு எல்லாம் மேலாக, நடிகர்களின் சம்பளத்தால் தான் திரைப்படங்கள் நட்டம் அடைவதாக குரல் கொடுத்து வந்த திருப்பூர் சுப்பிரமணியத்தின் ஸ்ரீ சக்தி திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு கட்டணமாக 380 ரூபாயுடன் முன்பதிவு கட்டணம் 36 ரூபாய் சேர்த்து 416 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் அருகில் உள்ள டைமண்ட் திரையரங்கில் மாஸ்டர் படத்திற்கு ஒரு டிக்கெட்டிற்கு 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

அரசு திரையரங்கு கட்டணத்தை உயர்த்தாத நிலையில் ஒரு டிக்கெட்டுக்கு எதற்காக இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியதற்கு பக்கத்தில் காலியாக இருக்கும் சீட்டுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும், அந்த சீட்டில் செல்போன் , பை உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளலாம் என்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் அளித்தார் திருப்பூர் சுப்பிரமணியம்

கொரோனா விடுமுறைக்கு பின்னர் கூவி அழைத்தும் வராத சினிமா ரசிகர்கள் திரையரங்கில் மாஸ்டர் திரைப்படத்தை காணும் ஆவலில் திரையரங்கிற்கு சென்றால் அதனை பயன் படுத்திக் கொண்டு சக்தி தியேட்டர் ரசிகர்களின் சட்டை பாக்கெட்டுகளை பதம்பார்த்து வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்

நடிகர் விஜய்யின் படம் என்றால் குழந்தைகளுடன் திரையரங்கிற்கு செல்லும் பெண் ரசிகர்கள், இந்த கட்டண கொள்ளை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாஸ்டர் படத்திற்கு முன்பு வரை ரசிகர்கள் வந்தால் மட்டும் போதும் என்று கட்டண சலுகை வழங்கி வந்த திரையரங்கு உரிமையாளர்கள் விஜய்யின் ரசிகர்களை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக அதிக தொகை கொடுத்து டிக்கேட் எடுக்க இயலாத ஏழை ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் திரையரங்கிற்கு பொதுமக்கள் வருவதில்லை என்று புலம்பும் திரையரங்கு உரிமையாளர்கள், நேரத்திற்கு தகுந்தாற்போல் கொள்ளை கட்டணம் வசூலித்தால் தற்போது வரக்கூடிய கூட்டமும் மெல்ல திசைமாறிவிடும் என்கின்றனர் வெள்ளித்திரை ரசிகர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments