பேருந்தில் பாய்ந்த மின்சாரம்? 5 பேர் உயிரிழப்பு
தஞ்சை அருகே தனியார் பேருந்தில் சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லணையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கணநாதன் என்ற தனியார் பேருந்து வரகூர் அருகே எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக சாலையோரமாக ஒதுங்கி இருக்கிறது.
விரிவாக்கப் பணிக்காக சாலையோரத்தில் வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் சாய்வது போல் சென்றிருக்கிறது. அப்போது பேருந்தின் படியில் நின்றிருந்த ஒருவர் பதற்றத்தில் அவ்வழியே மிகவும் தாழ்வாக சென்ற மின் கம்பியினை பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து கம்பியை பிடித்தவர் உட்பட, அவரை உரசியவாறு நின்றிருந்த 5 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின் அதிர்ச்சியில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் மூர்ச்சையடைந்தனர்.
3 பேஸ் எனப்படும் மும்முனை மின்சாரக் கம்பிகளில் இரண்டு கம்பிகளைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், விபத்து நேர்ந்த அடுத்த சில நொடிகளில் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மற்ற பயணிகள் உயிர் தப்பினர் என்றும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வது குறித்து கடந்த 4 மாதங்களாக மின்வாரியத்திடம் புகாரளித்து வருவதாகக் கூறும் பொதுமக்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலேயே இந்த கோர விபத்து நேர்ந்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
Comments