பொது இடங்களில் ஆபாசமாக கேள்வி கேட்டு தொல்லை... யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது!

0 26363

யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

யூடியூப் சேனல்களை பொறுத்த வரை, யார் வேண்டுமானாலும் சேனல் தொடங்கலாம் என்கிற நிலை இருப்பதால், புற்றீசல்கள் போல பெருகி வருகின்றன. அதோடு, காசு பார்க்கும் நோக்கத்திலும் தங்களின் சேனலை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் வரம்பு மீறி சில சேனல்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் உண்மையில்லாத செய்திகளை வெளியிடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுவதும் உண்டு.

அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், அதே யூடியூப் சேனலைச் சேர்ந்த சிலர் கருத்து கேட்பதாக கூறி பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் விரட்டி விரட்டி சென்று ஆபாசமான கேள்விகளை கேட்டு பதில் கூறுமாறு தொல்லை தருவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. பெசன்ட் நகர் கடற்கரையில் கடை நடத்தி வரும் பெண் வியாபாரி ஒருவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விரைந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் பேட்டி எடுத்த இளைஞர், கேமராமேன் ஆகியோரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கேமராவில் பெண்களின் அனுமதி இல்லாமல் தொல்லை செய்தும், விரட்டி விரட்டி ஆபாசமாக கேள்வி கேட்பது போன்று காட்சிகள் பதிவாகியிருந்தது.

பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக யூடியூப் சேனலை சேர்ந்த நிகழ்ச்சி தொடர்பாளர் அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்ட அசென் பாட்ஷா, சமீபத்தில் இளம் பெண்களிடத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான பையன்களை பிடிக்கும் என்று கேள்வி கேட்பார். அப்போது, ஒரு இளம் பெண், உன்னை மாதிரி பையன்தான் பிடிக்கும் என்று முத்தம் கொடுத்து விட்டு செல்வார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, ஆபாசத்தை மையமாக வைத்து வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால், தற்போது அசென்பாஷா உள்ளிட்ட மூன்று பேரும் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைதாகியுள்ள 3 பேர் தங்களுக்கு தெரிந்த பெண்களை முதலில் யதார்த்தமாக பேச வைத்து, அதனை வைத்து மற்ற பெண்களின் மனநிலையையும் தூண்டிவிட்டு பேட்டி எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த யூடியூப் சேனலில் வெளியான 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments