தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

0 4977
தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

முதல் கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து, 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 டோஸ்கள் சென்னை வந்துள்ளன.

நாட்டில் அவசர கால பயன்பாட்டுக்கு இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக சுகாதாரத்துறையினருக்கும் தடுப்பூசி போடும் பணி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டுக்கான கொரோனா தடுப்பூசி மகாராஷ்டிராவில் புனேவில் இருந்து விமானம் வழியாக நேற்றிரவு சென்னை அனுப்பப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் அவை சென்னை வந்திறங்கின.

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து தடுப்பூசி எடுத்துச் செல்லக்கடிய வாகனங்களை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புனே சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி 5 லட்சத்து 36ஆயிரம் டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசி 20 ஆயிரம் டோஸ்களும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் வளாகத்திற்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து, 10 மையங்களுக்கு அனுப்பப்பட்டு மாவட்ட வாரியாக விநியோகிக்கப்படும் என தெரிவித்தார். சரிபார்ப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இன்று மாலைக்கு மேல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கும்.

முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், சுய விருப்பமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 2 கட்டங்களாக தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே தடுப்பு மருந்து வழங்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments