சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி விநியோகம் தொடக்கம்.. விமானங்களில் அனுப்பிவைப்பு

0 6025
தமிழகத்திற்கான தடுப்பூசி இன்று காலை 11 மணிக்கு வருகை

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையினை, 200 ரூபாயாக, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளை மத்திய அரசு வாங்கியுள்ளது. இந்த மருந்து, ஹெச் எல் எல் எனப்படும் ஹிந்துஸ்தான் லைஃப் கேர் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் இன்று அதிகாலை ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து புனேயில் உள்ள சீரம் நிறுவன கிட்டங்கியில் இருந்து காலை 5 மணியளவில் குளிர்சாதன வசதி கொண்ட 3 லாரிகளில் இந்த மருந்துகள் ஏற்றப்பட்டன.

இந்த லாரிகளில் 478 பெட்டிகளில் கோவிஷீல்டு மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெட்டியும் 32 கிலோ எடையுடன் கூடியவை. இந்தப் பெட்டிகளுக்கு பூஜை செய்யப்பட்டு விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் கோவிஷீல்டு மருந்துகள் அடங்கிய பெட்டிகள் புனேயிலிருந்து டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, கவுகாத்தி, லக்னோ, சண்டிகர் மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் முதலாவதாக ஏர் இந்தியா சரக்கு விமானம் மூலம் கொரோனா மருந்து அகமதாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பைக்கு மட்டும் இந்த மருந்து தரைமார்க்கக் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக கூல்-எக்ஸ் கோல்ட் செயின் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்திற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்து முதல்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களுக்கு இன்றே தடுப்பு மருந்து சென்றடையும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments