இணையத்தில் லீக்கானது மாஸ்டர் திருட்டு வீடியோ..! பேரதிர்ச்சியில் தயாரிப்பாளர்
மாஸ்டர் படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில், டிரைலர் காட்சியே வெளியிடாமல் சில நொடி டீசர் மட்டுமே வெளியிட்டு வந்த படக்குழுவிற்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் படத்தின் சில காட்சிகளை வெளியிட்டு, திருட்டு வீடியோ கும்பல் சவால் விட்டுள்ளது. திருட்டு வீடியோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பெற்ற தடை பலனளிக்காமல் போனது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்..! பாப்கார்ன் பாதிவிலை..! என்றெல்லாம் அழைத்தும் கொரோனாவுக்கு பயந்து திரையரங்கிற்கு செல்லாத ரசிகர் கூட்டம், விஜய்யின் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தற்போதே முன்பதிவு செய்து வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற சூழலில், தங்களால் முதல் காட்சி பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற ஆர்வத்தில் முண்டியடித்து வரும் ரசிகர்களுக்கும், மாஸ்டர் படக்குழுவிற்கும் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மாஸ்டர் படத்தில் விஜய் அறிமுகமாகும் முதல் காட்சியைக் காண ஆயிரக்கணக்கில் செலவழித்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பிட்டு பிட்டாக சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் கசியவிட்டு வருவதால் மாஸ்டர் படக்குழுவினர் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
வாழைப்பழத்துடன் விஜய் அறிமுகமாகும் காட்சி 10 வினாடி, சட்டையில்லாமல் டைட்டானிக் காதல் கதையை தனது காதல் கதை போல ஒருவரிடம் விஜய் சொல்லும் காமெடிக் காட்சி 31 வினாடி, நாசருடன் காரில் பயணித்தபடியே விஜய் உரையாடும் காட்சி என அடுத்தடுத்து கத்தரித்து வெளியிட்டுள்ளனர்.
திரையரங்கு ஒன்றில் மாஸ்டர் படம் ஓடும் போது எடுத்த காட்சி போல இருக்கும் இந்த வீடியோக்கள், அனைத்தும் எங்கு எடுக்கப்பட்டவை என்பது நிச்சயம் மாஸ்டர் படக்குழுவினருக்கு தெரிய வாய்ப்புள்ளது. காரணம் எந்த ஒரு வெளி திரையரங்கிலும் வெளிவராத மாஸ்டர் திரைப்படத்தை யாருக்கு எங்கு திரையிட்டுக் காண்பித்தார்கள் என்பதை விசாரித்தால் இந்த வீடியோ லீக் செய்த பின்னணி வெளிச்சத்திற்கு வரலாம் என்கின்றனர் திரை உலகினர்.
அண்மையில் இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் அந்த உத்தரவை கேள்விக்குள்ளாக்கும் வகையில், மாஸ்டர் படத்தின் மாஸ்டர் பீசான நடிகர் விஜய் அறிமுகக் காட்சி உள்ளிட்ட காட்சிகளை சமூக விரோதிகள் வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றரை வருட நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்த படம் திரையரங்கில் வெளியாக விருக்கும் நிலையில் அதன் சில காட்சிகள் லீக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை யாரும் பகிர வேண்டாம்- மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமோ, சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் காட்சிகளை ரசிகர்கள் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம் என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வேண்டுகோளுக்கு கீழ் கருத்து பதிவிட்டுள்ள ரசிகர்கள், மிகுந்த கவனமாக இருந்து இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு ரசிகரோ, 13 ந்தேதி தான் முன்பதிவு செய்த மாஸ்டர் படத்தின் இரவுக் காட்சிக்கான 2 டிக்கெட் தன்னிடம் இருப்பதாகவும், தேவைப்படுவோர் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தனது செல்போன் எண்ணைப் பதிவிட, அதற்கு மற்றொரு ரசிகரோ, இங்க வந்து பிளாக்ல டிக்கெட் சேல்ஸ் பண்ரீங்கன்னு என்று கலாய்த்துள்ளார்..!
இணையத்தில் மாஸ்டர் படம் வராது எனவே திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்த ரசிகர்களையும், சமூக விரோதிகள் வெளியிட்ட மாஸ்டர் பிட் காட்சிகள் திரையரங்கிற்கு வருவதை குறைத்துவிடுவோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எழுந்துள்ளது.
பள்ளிக்கூடத்தில் பிட் அடித்த பசங்களைப் பிடித்து மாஸ்டர் பிரிச்சி எடுப்பது வழக்கம், ஆனால் இங்கே படம் வரும் முன்னரே கிடைத்த மாஸ்டர பிட்டு பிட்டா பிரிச்சி பசங்க பரப்பிக் கொண்டு இருக்க அன்றே கணித்தார் சூர்யா என்று நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இது போன்ற திருட்டு வீடியோ பகிர்வு கலாச்சாரம் தமிழ் திரை உலகின் எதிர்காலத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல என்பதே கசப்பான உண்மை..!
Comments