இந்தோனேசியா : காவு கேட்கும் விமான விபத்துகள்... காரணம் என்ன..?
இந்தோனேசியாவில் இருந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்பட 62 பேர் பலியாயினர். ஏன் அந்த நாட்டில் விமான பாதுகாப்பு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்தோனேசியாவில் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 - 500 விமானம் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் ஜகார்தாவில் இருந்து போர்னியோ தீவு நோக்கி புறப்பட்ட 4 நிமிடங்களில் மாயமானது. விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடைத்துள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டி விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமானத்தின் பாகங்கள் அகலமாக சிதறவில்லை என்பதால், தண்ணீரில் விழுந்த பிறகே சிதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பயணிகள் உள்பட பயணம் செய்த 62 பேரும் உயிரிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னர் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்ற போதிலும், மோசமான வானிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விபத்தில் சிக்கிய விமானம் 27 ஆண்டுகள் பழமையானதாகும். இதுவரை 8 முறை இந்த ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில் 220 பேர் மரணமடைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக பயன்பாட்டுக்காக இயக்கப்படும் விமானங்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்படுவது வழக்கம். 2012 ஆம் ஆண்டு அந்த விமானத்தை ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனம் வாங்குவதற்கு முன்பு கான்டினன்டல் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன.
விமானத்தின் வயதையும் தாண்டி, இந்தோனேசியாவின் புவியியல் அமைப்பும் விபத்து நிகழ்வதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தோனேசியாவில் அதிக அளவில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்குதலும் அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி எரிமலை வெடித்து கரும் சாம்பலை வெளியேற்றுவதும் விமான பயணத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
ஆசியாவிலேயே அதிகமான விமான விபத்துக்களை எதிர்கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ள 104 விபத்துக்களில் 2353 பேர் உயிரைப் பறிகொடுத்தனர்.
மோசமான விமான பராமரிப்பு, விமானிகளுக்கு போதிய பயிற்சி இல்லாதது, தகவல் தொடர்பில் ஏற்படும் தோல்வி, எந்திர கோளாறு மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரச்சனைகள் போன்றவை விமான விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. விமான பாதுகாப்பை வலுப்படுத்தாமல் இந்தோனேசியா அரசு அலட்சியமாக இருந்தால், பயணிகளின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments