ம.பி. ஆற்றங்கரையோரத்தில் புதையல் வேட்டையில் ஈடுபடும் மக்களால் பரபரப்பு ! நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வேட்டை

0 6479

த்தியப் பிரதேச மாநிலத்தில், ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாகப் பரவிய புரளியை நம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குழி தோண்டி புதையலைத் தேடி வருகிறார்கள்.

உலகில் பல்வேறு பகுதிகளிலும் புதையல் குறித்த வதந்திகள் தலைமுறைகள் பல கடந்தும் நூற்றாண்டுகள் பல கடந்தும் கால காலமாகச் செய்தி கடத்தப்பட்டு வருகிறது.

மங்கோலியா பேரரசன் செங்கிஸ்கான் கல்லறையில் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறி நூற்றாண்டு காலமாகப் பலர் தேடி வருகின்றனர். அதே போன்று கங்கை நதி அடியில் தனநந்தர்கள் தங்கத்தைப் புதைத்துவைத்துச் சென்றனர் என்று கூறி காலகாலமாக ஒரு சாரார் புதையல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளது மத்தியப் பிரதேசம்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு வடக்கே 141 கி.மீ தொலைவில் உள்ளது ராஜ்கர் மாவட்டம். வறண்ட பூமியான ராஜ்கர் மாவட்டத்தில் சிவ்புரா கிராமத்தில் பாயும் பார்வதி நதிக்கரையோரம், சில நாட்களுக்கு முன்பு சிலருக்குப் பழங்கால நாணயங்கள் சில கிடைத்தன. இந்த செய்தி கசிந்ததும், அந்தப் பகுதியில் முகலாயர் காலத்துக்கு முற்பட்ட புதையல் ஆற்றில் இருப்பதாக வதந்தி பரவியது. இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் ராஜ்கர், குணா மற்றும் செஹோர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் புதையல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஆற்றின் கரையோரம் இரண்டு பக்கமும் பொதுமக்கள் ஆழமான குழிகளைத் தோண்டி புதையல், பழங்கால தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைக்கின்றனவா என்று இரவு பகலாகத் தேடி வருகின்றனர். இந்த இடத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் காவலர்களை களமிறக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இது குறித்து ராஜ்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, “தங்கம் மற்றும் வெள்ளி புதையல் கிடைக்கிறது என்று பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம்” என்று அறிவித்துள்ளார்.

ஆனால், காவல்துறையின் அறிவிப்பைப் பொதுமக்கள் ஏற்க மறுத்துத் தொடர்ந்து நான்கைந்து நாட்களாகப் புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தங்கப் புதையல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பழங்கால நாணயங்கள் ஏதாவது ஒன்றிரண்டு கிடைத்தாலும் போதும். அவற்றின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பதால் அதை விற்றுக் காசாக்கிக்கொள்கிறோம் என்று கூறி இரவு பகலாகத் தேடி வருகிறார்கள்.

இது குறித்து புதையல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ள ரானு யாதவ் எனும் 18 வயது இளைஞர், “எங்கள் அதிஷ்டத்தை சோதிக்க இருபத்து நான்கு மணி நேரமும் புதையல் தேடுதலில் ஈடுபட்டுள்ளோம். இங்கு எங்களுக்கு பழங்கால நாணயம் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பார்வதி ஆற்றங்கரையில் புதையில் இருக்கிறது எனும் தகவலை ராஜ்புர் மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆற்றங்கரையோரம் சிலருக்கு ஒரு சில நாணயங்கள் கிடைத்தன. ஆனால், புதையல் கிடைத்திருப்பதாக வதந்தி பரவியுள்ளது.

ஆற்றங்கரையில் கிடைத்துள்ள நாணயங்களின் முக்கியத்துவம் குறித்து தொல்லியல் துறையிடம் கேட்டோம். அவர்கள் நாணயங்களை ஆய்வு செய்து, வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆனவை என்றும் மக்கள் நம்புவது போல அதில் தங்கம் வெள்ளி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்கள் நினைப்பது போல இந்த நாணயங்களுக்கு அவ்வளவு மதிப்பும் இல்லை. இதை மக்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் கூறுவதைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்து வருகிறார்கள்..! இதனால், அந்தப் பகுதி பரபரப்பாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments