'பந்து வீச முடியாது போடா...!’ - ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை புலம்ப வைத்த விகாரி

0 81381

ப்படியும் ஜெயித்து விடுவோம் என்று ஆணவத்தில் திரிந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இனவெறி பிடித்த ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும் தன் மட்டையால் கட்டையை போட்டு பதிலளித்துள்ளார் ஹனுமன் விகாரி.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 51 ரன்களிலும் சப்மன் கில் 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 77 ரன்களும் ரகானே 4 ரன்களிலும் அவுட்டாகி விட, ரிசப் பண்ட் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். 12 பவுண்டரிகள் 3 சிக்சருடன் ரிசப் பண்ட் 97 ரன்களை குவித்து வெளியேறினார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று விடுமென்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில், ஹனுமன் விகாரியும் அஸ்வினும் இணைந்து நங்கூரம் போல நின்று நிதானமாக ஆட ஆரம்பித்தனர்.

குறிப்பாக ஹனுமன் விகாரி நல்லாவே கட்டையை போட்டார். ஒரு கட்டத்தில் 100 பந்துகளுக்கு வெறும் 6 ரன்களை மட்டும்தான் விகாரி எடுத்திருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் சற்று வித்தியாசமான செஞ்சுரி என்றும் பேசப்பட்டது. இத்தனைக்கும், விகாரிக்கு காலில் தசைபிடிப்பு வேறு இருந்தது. ஆனாலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை கட்டைய போட்டே டயர்டாக்கினார் விகாரி. அஸ்வினும் தன் பங்குக்கு கட்டைய போட ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் நொந்து போனார்கள். இந்த ஆட்டத்தில் 161 பந்துகளை எதிர்கொண்ட ஹனுமன் விகாரி 23 ரன்களை மட்டுமே எடுத்தார். ஒரு கட்டத்தில் 118 பந்துகளுக்கு வெறும் 7 ரன்களைத்தான் ஹனுமன் விகாரி எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் மனதுக்குள் புலம்பிக்கிட்டேதான் விகாரிக்கு பந்து வீசினார்கள் என்பதுதான் நிஜம்.

சிட்னி டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 131 ஓவர்கள் பேட் செய்துள்ளது . கடந்த 1980 ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் இத்தனை ஓவர்கள் இந்திய வீரர்கள் பேட் செய்ததும் இதுதான் முதன்முறை.

இந்த ஆட்டத்தைப் பொறுத்த வரை, ஹனுமன் விகாரிதான் ஹீரோ. ஏனென்றால், தசை பிடிப்புடன் விளையாடுவதும் நீண்ட நேரம் களத்தில் இருப்பது என்பதும் தன் கிரிக்கெட் கேரியரையே கெடுத்துக் கொள்வது போன்றது. காயமடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரன்னர் விதியும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், விகாரிக்கு ரன்னரும் வைத்துக் கொள்ள முடியவில்லை. ரிடையர்ட் ஹர்ட் ஆகவும் அவர் விரும்பவில்லை. வலியுடன் விளையாடி ஆட்டத்தை சமனில் முடிக்க பாடு பட்ட ஹனுமன் விகாரி ராகுல் டிராவிட்டைதான் நினைவுபடுத்தினார். எதிர் அணி வெற்றி பெறுவதை தடுப்பதும் ஒருவகையில் ஹீரோயிசம்தானே... அந்த வகையில் ஹனுமன் விகாரியும் ஒரு ஹீரோதான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments