நிறுத்தி வைக்க முடியாமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியுமா என உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் வினவியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 47 நாட்களாக நீடிக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை என விவசாய சங்கங்களும், திமுக எம்பி. திருச்சி சிவா உள்ளிட்டோரும் தாக்கல் செய்த மனுக்களை ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
அது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே அமர்வு முன்பு நடந்த விசாரணையில், போராடும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே ஏதாவது பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்பது தங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தால், விவசாயிகள் தொடர்ந்து இதே இடங்களில் போராட்டம் நடத்துவார்களா? அல்லது தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை தொடர்வார்களா என அறியவும் விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
வேளாண் சட்டங்கள் நல்லவை என ஒரு மனு கூட தாக்கலாகவில்லை என கூறிய நீதிபதிகள், சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், வயதானவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டனர். எனவே சிறிது காலம் இந்த 3 சட்டங்களையும் நிறுத்தி வைத்து ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் அவர்கள் வினவியுள்ளனர்.
வேளாண் சட்டங்கள் குறித்த விசாரணையின் போது, இன்றைக்குள் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கெடு விதித்தனர். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என கடுமை காட்டிய நீதிபதிகள், வேளாண் சட்டங்களை எந்த குறையும் இல்லாத வகையில் கொண்டு வந்திருக்க வேண்டும் எனவும் கூறினர். நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அரசு கொண்டு வந்த சட்டங்களை நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்க முடியாது என்று வாதிட்டார்.
விவசாயிகள் சங்கம் ஒன்றின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, விவசாயிகளை டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு செல்ல அனுமதிக்குமாறும், அவர்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.
Comments