வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் - குமரி கடல் பகுதிக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிமீசல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தலா 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் 14-ம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments