20 ஆண்டுகள் படுத்தபடுக்கை... தன் ஹீரோவைப் பார்த்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா!
சினிமா இதுவரை எத்தனையோ பேரை கொண்டாடியிருக்கிறது எத்தனையோ பேரை ஒரே இரவில் மறந்தும் விட்டிருக்கிறது, அப்படி மறக்கப்பட்டவர்தான் நடிகர் பாபு. இவரின், சோகக்கதையை கேட்டால் நம்மை அறியாமலேயே கண்களில் நீர் திரண்டு விடும்.
இயக்குநர் பாரதிராஜா தன் படத்தில் ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்துகிறார் என்றால், அந்த நடிகரின் திறமை குறித்து விளக்கமாக சொல்லல தேவையில்லை. 1990களில் இயக்குநர் பாரதி ராஜா உச்சத்தில் இருந்த போதுதான், என் உயிர் தோழன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் பாபு. இந்த படத்தில் பாபு , தர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். பின்னர், பெரும்புள்ளி, தாயம்மா ஆகிய படங்களிலும் பாபு நடித்தார். 1990 களில் நல்ல நடிப்பு திறமை கொண்ட கலைஞராகஅறியப்பபட்ட பாபு சண்டை காட்சியால் தன் வாழ்க்கையையே தொலைக்க நேர்ந்தது.
'மனசார வாழ்த்துங்களேன் ' என்ற படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து பாபு குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து கொண்டாலும், பாபுவால் எழுந்து நடமாட முடியவில்லை. இதனால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்பட்டது. ஓரளவுக்கு தேறிய பிறகு, நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குநர் ராதாமாமேகன் எடுத்த ஆனந்தகிருஷ்ணா என்ற படத்துக்கு நடிகர் பாபு வசனம் எழுதினார். ஆனால், துரதிருஷ்டவசமாக, அந்த படம் வெளிவராமலேயே போனது.
இந்த நிலையில், மீண்டும் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், படுக்கையிலேயே கழிக்கும் நிலைக்கு பாபு தள்ளப்பட்டார் . ஒரு ஆண்டு இரு ஆண்டுகள் இல்லை. கிட்டத்ததட்ட 20 ஆண்டுகளாக நடிகர் பாபு, படுத்த படுக்கையாகத்தான் கிடக்கிறார்.சமீபத்தில், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க போன பாரதிராஜா கண்கலங்கி போய் தன்னால் முடிந்த உதவியை செய்து விட்டு வந்துள்ளார். பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.
பொதுவாக, சண்டைக்காட்சிகளில் ஹீரோவுக்கு டூப் போடுவது வழக்கம். தேர்ந்த சண்டை கலைஞர்கள் ஹீரோவுக்காக டூப் போட்டு நடிப்பார்கள். ஆனால், பாபு காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காக டூப் போடமல் நடித்திருக்கிறார். அதனால் , காயம் ஏற்பட்டு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். தமிழ் திரையுலகமும் ஒரு நல்ல கலைஞரை இழந்து விட்டது என்று பாபுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். தற்போது, நடிகர் பாபுவின் சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதால், திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரின் நண்பர்கள் முன் வைத்துள்ளனர்.
Comments