அமெரிக்கா : அதிகளவில் வேலையிழப்பு.....ஆண்களை முந்திய பெண்கள்!
அமெரிக்காவில்,ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வேலை இழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் வேலை இழப்பது குறைவாகவே இருந்தது. ஆனால் 2020ஆம் ஆண்டின் முடிவில் அது விரிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களை காட்டிலும் பெண்கள் 8,60,000 குறைவான வேலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலர்க்கு நிகராக பெண்கள் சராசரியாக 81 காசுகள் மட்டுமே சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து, உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க உலகநாடுகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பல துறைகள் அவதிப்பட்டன.
கொரோனவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில்,கல்வித்துறை , குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு, ஆடை அணிகலன் விற்கும் கடைகள் மற்றும் உணவகங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.
அமெரிக்காவில்,இந்த 3 துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் வேலைபுரிந்து வந்தனர். கொரோனாவால் , இந்த தொழில்கள் அனைத்தும் முடங்கிப்போயின. இந்த துறைகளில் வீட்டிலிருந்து வேலை புரிவதற்கான வாய்ப்புகளும் குறைவு. இதனால் பெண்கள் அதிக அளவில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பெண்களுக்கு, போதுமான விடுப்பு நாட்கள் வழங்கப்படாததாலும் ,வீட்டை கவனிக்கும் பொறுப்பு இருப்பதாலும் பலரும் வேலையை விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக கறுப்பின பெண்கள் மற்றும் வடக்கு அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட லாத்தின் இன பெண்கள் அதிகமாக வேலைகளை இழப்பதாக கூறப்படுகிறது.
லாத்தின் இன பெண்களின் வேலையின்மை விகிதம் 9.1சதவிகிதம் ஆகவும், கறுப்பின பெண்களின் வேலையின்மை விகிதம் 8.4சதவிகிதம் ஆகவும் உள்ளது. வெள்ளையின பெண்களின் வேலையின்மை விகிதம் அவர்களை ஒப்பிடும் போது 5 .7 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனிற்கு பொருளாதாரத்தை மீட்பதும், வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
Comments