'இந்தியாவின் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தமிழ் மன்னர் நடத்தியதுதான்!'- தி வீக் கட்டுரையில் தகவல்

0 11872

சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட, நீர்மயமான வெற்றித் தூணான 'சோழ கங்கம்' ஏரி பல வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது...

சோழ மன்னர்களில் புகழ் பெற்றவர் ராஜேந்திர சோழன். கி.பி 1025 ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றையும் மாற்றி எழுதியவர் இவர்.   வடக்கே கங்கை வரை படையெடுத்து வெற்றிகொண்டது மட்டுமல்லாமல் கடல் கடந்து இலங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா, சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் போர்கள் பல நடத்தி ராஜேந்திர சோழன் வெற்றி பெற்றான்.

வெளிநாட்டுக்கு படையெடுத்து சென்ற முதல் இந்திய மன்னர்  ராஜேந்திரன் சோழன்.  ராஜேந்திர சோழனின் கடற்படைகள் தொடுத்த திட்டமிட்ட, அதிரடியான, துல்லியத் தாக்குதல்களால்  விஜய சாம்ராஜ்ஜியத்தின் துறைமுகங்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.  ராஜேந்திர சோழன் குறித்து 'தி வீக் ' இதழ் எழுதிய 'பெருங்கடவுளின் கடவுள் (  lord of ocean) என்ற  கட்டுரையில், ராஜேந்திர சோழனின் கடல் கடந்த தாக்குதல் தான், இந்தியாவின் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (surgical strike)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்க கால தமிழ் மன்னர்களான கரிகாலன் மற்றும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் நிகழ்த்திக்காட்டிய வடநாட்டுப் படையெடுப்பை தன் காலத்திலும் வெற்றிகரமாக நிகழ்த்திய ராஜேந்திர சோழன், கங்கை வரை சென்று வெற்றி பெற்றதையடுத்து சோழநாட்டின் தலைநகரை  மாற்றினார். கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை நிர்மாணித்ததோடு மட்டுமல்லாமல், கங்கைகொண்ட சோழீசுவரர் எனும் காலத்தால் அழியாத கோயிலையும் எழுப்பி சோழகங்கம் எனும் பிரமாண்ட ஏரியையும் வெட்டினார். திருவாலங்காடு செப்பேடு ஒன்றில் சோழகங்கம் ஏரி பற்றி  ’சலமயமான சயத்தம்பம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சலமயமான சயத்தம்பம் என்றால் நீர்மயமான வெற்றித்தூண் என்பது பொருளாகும். 

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட சோழகங்கம் ஏரி தற்போது, பொன்னேரி என்ற பெயரில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. சுமார் 824 ஏக்கர் பரப்பளவில் 4800 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள சோழகங்கம் ஏரி மூலம் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவிலான வயல்வெளிகள் பாசனம் பெறுகின்றன.

ராஜேந்திர சோழன் காலத்தில் சோழகங்கம் ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது. ஆனால், சமீப காலத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது. மேலும், ஏரியும் ஆக்கிரமிப்பு காரணமாகச் சுருங்கியது. இந்த ஏரியை  முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், ஏரி ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சோழகங்கம் ஏரி முழு கொள்ளளவான 114 கன அடியை எட்டி மறுகால் பாயத் தொடங்கியுள்ளது.  

நீண்ட காலத்துக்குப் பிறகு சோழகங்கம் கடல் போல நிரம்பிக் காட்சியளிப்பதால் கங்கைகொண்ட சோழபுரம் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments