3வது டெஸ்ட் போட்டி; இந்தியா 244 ரன்களில் ஆல் அவுட்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
சிட்னியில் நடைபெறும் அப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை எடுத்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் 3ம் நாளான இன்று தனது முதல் இன்னிங்சை இந்தியா தொடர்ந்து விளையாடியது. ரஹானே 22 ரன்களிலும், ரிசப் பந்த் 36 ரன்களிலும், புஜாரா அரை சதம் அடித்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
இதேபோல் மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்சில் 244 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வில் புகோவ்ஸ்கியை 10 ரன்னில் முகம்மது சிராஜும், டேவிட் வார்னரை 13 ரன்னில் அஸ்வினும் வீழ்த்தினர்.
இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுஸ்கனேயும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்தனர். 2 பேரும் நிதானமாக விளையாடி விக்கெட் சரியாமல் பார்த்து கொண்டனர். ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்து, 197 ரன்களை ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது.
Comments