திருட்டு செல்போன் வாங்கியதால் விபரீதம்...
சென்னை அமைந்தகரையில், திருட்டு செல்போன் என தெரியாமல் எலெக்ட்ரானிக் சந்தையில் வாங்கிய இளைஞர் போலீஸ் விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பி.பி தோட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் அம்பத்தூரில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பழைய மொபைல் ஒன்றை தனது பயன்பாட்டிற்கு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று புளியந்தோப்பு போலீசார் லட்சுமணனின் வீட்டுக்குச் சென்று, அவர் பயன்படுத்துவது திருட்டு மொபைல் எனவும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறும் கூறிவிட்டுச் சென்றனர்.
இதனை அடுத்து லட்சுமணன் தனது வழக்கறிஞருடன் புளியந்தோப்பு காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு மொபைல் பற்றி எந்த விவரங்களும் தெரியாது எனவும், சில மாதங்களுக்கு முன் செஹண்ட் ஹேண்டில் ஒரு பெண்ணிடமிருந்து அந்த மொபைல் போனை வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த போனை விற்றவரின் வீட்டை காட்டும்படி, லட்சுமணனை அழைத்து சென்றபோது அந்தப் பெண் ஏற்கனவே அங்கிருந்து காலி செய்துவிட்டது தெரிய வந்தது.
அந்தப் பெண் குறித்த விபரங்கள் தேவைப்படும் போது விசாரணைக்காக காவல்நிலையம் வரவேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். வீட்டுக்குச் சென்ற லட்சுமணனுக்கும் அவரது தாய்க்கும் இடையே செல்போன் சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமணன் நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments