அரசுக்கு அடங்காத ஆன்லைன் ரம்மி இளைஞர் ரயிலில் பாய்ந்தார்..! ரூ5.60 லட்சம் இழந்ததால் விரக்தி
கோவையில் அரசின் தடை உத்தரவை மீறி திருட்டுத் தனமாக இயங்கும் ஆன்லைனில் ரம்மிகல்ச்சர் விளையாடி 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இழந்த உபர் ஓட்டுனர் ஒருவர், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் உபர் கால்டாக்சி ஓட்டுனர் எல்வின் பிரடெரிக். 29 வயது இளைஞரான இவர், மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டே பகுதி நேரமாக கால் டாக்சியும் ஓட்டி வந்துள்ளார்.
இதில் கிடைத்த வருமானத்தை சேமித்து வைத்திருந்த நிலையில், கடந்த சிலமாதங்களாக ஆன்லைனில் ரம்மி கல்ச்சர் விளையாடி வந்த எல்வின் பிரடெரிக் அதற்கு அடிமையானதாகக் கூறப்படுகின்றது.
ரம்மியில் விட்டதை பிடிப்பதாக நினைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துள்ளார் அவர்.
இந்த நிலையில் அரசு தடைவிதித்த பின்னரும் திருட்டுத்தனமாக இயங்கிவந்த ரம்மி கல்ச்சர் மூலம் தடையின்றி விளையாடிய எல்வின் பிரடெரிக் கடந்த 4 ந்தேதி வரை மட்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிகொடுத்துள்ளார்.
அதன் பின்னர் செல்போன் உள்ளிட்டவற்றை காரிலேயே விட்டு விட்டு மாயமாகிவிட்டார். அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக எல்வின் பிரடெரிக்கின் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தினமும் பல மணி நேரம் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டதால், உழைத்த பணம் மொத்தத்தையும் இழந்த விரக்தியில் எல்வின் பிரடெரிக் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைனில் வடிவமைக்கப்பட்டுள்ள சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடும் நபர்களிடம் என்ன கார்டுகள் இருக்கின்றன என்பது ரம்மி கல்ச்சர் சர்வருக்கு தெரியும் என்பதால், பங்குபெறும் நபரை இடையிடையே வெற்றி பெற வைத்து ஆசைகாட்டி வங்கி கணக்கில் உள்ள ஒட்டு மொத்தமாக பணத்தையும் சுருட்டிக் கொள்ளும் டெக்னிக் கையாளப்படுவதாக கூறப்படுகின்றது.
இதுவரை ஒருவர்கூட ஆன்லைன் ரம்மியில் பெரிய அளவு பணத்தை வென்றதில்லை என்றும், ஆண்டுமுழுவதும் கோடிக்கணக்கான ரூபாயை ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் அள்ளிக்குவித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான எல்வின் பிரடெரிக் போன்று வேறு யாராவது உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்பாக, அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திருட்டு தனமாக இயங்கும் ஆன் லைன் ரம்மி செயலிகளின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments