”மாலை நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல வேண்டாம்” - தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரின் கருத்துக்கு குவியும் எதிர்ப்பு!

0 3858
Chandramukhi Devi

உத்தர பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தை சேர்ந்த சந்திரமுகி தேவி என்பவர் தெரிவித்த கருத்து தற்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பாதவ்ன் மாவட்டத்தில், 50 வயது பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவில் பூசாரி மற்றும் 2 சீடர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் , உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், “பாதிக்கப்பட்ட 50 வயது பெண், மாலையில் வீட்டை விட்டு செல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது துணையுடன் சென்றிருந்தாலோ இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்தபின், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, பெண்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் என்றும், பெண்களை பாதுகாப்பது சமூகத்தின் கடமை என்றும் கூறியுள்ளார். மேலும் சந்திரமுகி தேவி கூறிய கருத்து, தேசிய பெண்கள் ஆணையத்தின் கருத்தில்லை என்றும், அதனை அவர் கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

சந்திரமுகி தேவியின் இந்த கருத்துக்கு, பலரும் தங்களது கடும் எதிர்ப்பினை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சந்திரமுகி தேவி, அவ்வாறு எந்த கருத்தையும் தான் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments