நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைப் போராட்டத்திற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், 20ந் தேதி சுமுக முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் தனது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்கிறார். நேற்று நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு, நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா சட்டம் ஒழுங்கை மதிக்கும் நாடு என்றும், முற்றுகைப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகளைக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடம் மற்றும் உடைமைகளை பாதுகாக்க, தாம் தேசிய பாதுகாப்பு படையினரை வரவழைத்து வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறிய டிரம்ப், வரும் 20ம் தேதி சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
ஜோ பைடனின் வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்து வருவதால், 25-வது சட்டதிருத்தத்தை உடனடியாக செயல்படுத்தி டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என துணை அதிபர் மைக் பென்சுக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில், பரபரப்பான தேர்தல் முடிந்து அமைதி காக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
Comments