இரும்புச்சத்து மாத்திரையால் விபரீதம்... மறு வாழ்வு பெற்ற குழந்தை..!
இரும்புச் சத்து மாத்திரைகளை அதிகமாக உட் கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது கள்ளக்குறிச்சி குழந்தைக்கு, சென்னை - எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மறுவாழ்வு கொடுத்துள்ளது. தாயின் கவனக்குறைவால் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட பெண் குழந்தை குறித்து அலசுகிறது, இந்த செய்தித் தொகுப்பு...
விழிப்புடன் இல்லையென்றால் விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்பதை நிரூபிக்கும் வகையில் கள்ளக்குறிச்சியின் ஏழை தம்பதி குமரேசன் - கனிமொழி தம்பதியின்இல்லத்தில் நிகழ்ந்துள்ளது. கர்ப்பிணியான கனிமொழி, தாம் சாப்பிட வண்ண - வண்ண சத்து மாத்திரைகளை வீட்டில் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்தார். தாயின் கவனக்குறைவு, குழந்தையின் உயிரோடு விளையாடும்
விபரீதத்தை உருவாக்கி விட்டது.
ஐந்தாறு இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது பவ்யா என்ற குழந்தை, தனியார் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக்கசிவு - மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை - எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பவ்யாவுக்கு,இங்குள்ள மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.
இரும்பு சத்து மாத்திரை உடலுக்கு நல்லது என்றாலும், வயது - உடல் எடைக்கு ஏற்ப உட் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இரும்பு சத்து மாத்திரை உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
கள்ளக்குறிச்சி சிறுமிக்கு DESFRROHAMINE என்ற உரிய எதிர்ப்பு மருந்தை சரியான நேரத்தில் கொடுத்ததால், மரணத்தின் விளிம்பு வரை சென்ற குழந்தை, உயிர் பிழைத்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி சிறுமியின் உயிரை காப்பாற்றிய சென்னை - எழும்பூர் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருக்கு, மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் பாராட்டு தெரிவித்துள்ளது.
விவரம் அறியா குழந்தைகள் உள்ள வீடுகளில் இருக்கும் விவரம் அறிந்தவர்கள், மருந்து,மாத்திரைகளை பாதுகாப்பான இடத்தில் உயரமாக வைத்தால் இது போன்ற தேவையற்ற விபரீதங்களை நிச்சயம் தவிர்க்க முடியும்.
Comments