நான் ஒன்றும் மீட்பர் இல்லை... நடிகர் சோனு சூட் வெளியிட்ட புத்தகம்!

0 2035

திரையில் வில்லனாகவும், நிஜத்தில் ஹீரோவாகவும் அசத்திவரும் சோனு சூட், தற்போது புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சோனு சூட். தமிழில் ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கியதால் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கொரோனா ஊரடங்கு குறித்த சூழல் நிச்சயமற்றதாக மாற, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர். வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டரை வெறும் கால்களில் நடக்க தொடங்கினர்.

இதனை தொடர்ந்து சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்து, ரயில்கள் மற்றும் விமானங்களையும் ஏற்பாடு செய்தார் சோனு சூட். இதற்காக அவருக்கு ஐநாவின் சிறந்த மனிதாபிமான செயலுக்கான விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல உதவிகள் செய்து வரும் சோனுசூட் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்றும் கூட அந்த படப்பிடிப்பில் வேலை செய்து வரும் 100 தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் சோனுசூட்.

இந்த நிலையில் தற்போது "ஐ அம் நோ மெசியா" என்ற புத்தகத்தை சோனுசூட் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் தொழிலார்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விளக்கமாக கூறுகிறது. எழுத்தாளர் மீனா என்பவருடன் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார் சோனு சூட்.

இந்த புத்தகம் குறித்து சோனுசூட், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை தன் கடமையாக பார்ப்பதாகவும், வெற்றியுடன் சமூக பொறுப்பும் வரவேண்டும் என்று தன் பெற்றோர் தனக்கு கூறியதை தற்போது செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments