டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை - கலவர பூமியான நாடாளுமன்றம்!
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போது அதிபராக இருப்பவருமான டொனால்டு டிரம்பை தோற்கடித்தார். இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து அவர் அதிபராக பதவி ஏற்க வகை செய்யும் விதமாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் கூடி இருந்தனர்.
இதேநேரத்தில், வாஷிங்டனில் டிரம்ப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கூடினர். தேர்தல் மூலம் டிரம்ப் வெற்றியை பைடன் தரப்பு திருடிவிட்டதாகவும் அவரை அதிபராக பதவி ஏற்க அனுமதிக்க கூடாது என்று கூறி அவர்கள் முழக்கம் எழுப்பியபடியே நாடாளுமன்றத்தை நெருங்கினர். ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இதனால் நேரம் செல்லச் செல்ல அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் முழக்கங்களை தீவிரப்படுத்தியதால் நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்புறம் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அதிபரை தேர்வு செய்யும் தேர்வாளர் குழுவின் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட தகவல் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் ஆவேசமாக நாடாளுமன்ற கட்டிடத்தின் கிழக்கு வாசலில் வைக்கப்பட்டிருத்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இரு அவைகளையும் இணைக்கும் ரோதுண்டா என்ற மத்திய மண்டபத்தின் படிகளில் கலவரக் காரர்கள் ஏறினர். பின்னர் அவைத் தலைவர் பெலோசியின் அலுவலக அறையை அவர்கள் சூறையாடினர்.
அதை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் வாசல்களை அடைத்து விட்டு எம்பிக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அப்போது ஒரு வகையான புகை பரவியது. இதனால் பீதி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமை மோசமாவதை உணர்ந்து, இருக்கைகளுக்கு அடியில் உள்ள முக பாதுகாப்பு கவசங்கள் எடுத்து அணியுமாறு எம்பிக்களை அறிவுறுத்தினர்.
பின்னர் எம்பிக்கள் அனைவரும் பாதாள ரகசிய அறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, கலவரம் பெரிதாவதை உணர்ந்த துணை அதிபர் பென்ஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோர் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதனிடையே நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல்பகுதியில் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றவர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்டடம் அருகே வெடிபொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற கலவரம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. கலவரம் தொடர்பாக இதுவரை 52பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ள போலீசார் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
Comments