இசைக்கப்பட்ட தேசிய கீதம்... முகமது சிராஜ் கண்களில் தாரை தாரையாக வழிந்த ஆனந்த கண்ணீர்!
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, இளம் பந்து வீச்சாளர் முகமது சிராஜின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வி கண்டது. இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி தாய்நாடு திரும்பி விட்டார். இந்த ஆட்டத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். மற்றோரு வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில் இளம் வீரர் முகமது சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிராஜ், ஆஸ்திரேலியா சென்றடைந்த அடுத்த நாளே ஹைதரபாத்தில் இருந்த அவரின் தந்தை முகமது கவுஸ் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போய் விட்டார். சாதாரண ஆட்டோ ஓட்டுநரான முகமது கவுஸ் , தன் மகனின் கிரிக்கெட் வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். காலையில் ஒரு வேலை மாலையில் ஒரு வேலை இரவில் இன்னோரு வேலை பார்த்து முகமது சிராஜின் கிரிக்கெட் பயிற்சிக்காக பணம் சம்பாதித்தவர். தன் மகனிடத்தில் 'என்றாவது ஒருநாள் தேசத்தை நீ பெருமைப்படுத்துவாய்' என்று சொல்லி சொல்லி வளர்த்தவர். அந்த நாளுக்காகவே முகமது சிராஜ் காத்திருந்தார். எனினும், தந்தையின் மறைவுக்கு நேரில் வந்து முகமது சிராஜால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலையே இருந்தது.
இதனால், ஆஸ்திரேலியாவில் இருந்த முகமது சிராஜ் மெல்பர்ன் நகரில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட்டில் முதன் முதலாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் லாபுசானை (Marnus Labuschagne) வீழ்த்தி முதல் டெஸ்ட் விக்கெட்டையும் சிராஜ் கைப்பற்றினார். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 36.3 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 77 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த 7 ஆண்டுகளில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் இதுவே முதன்முறை.
இந்த நிலையில், இன்று சிட்னியில் தொடங்கிய 3 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பிடித்திருந்தார். போட்டி தொடங்கும் முன், இரு நாட்டு தேசிய கீதமும் சிட்னி மைதானத்தில் இசைக்கப்பட்டது. அப்போது, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, முகமது சிராஜின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்ட அவர் கண்களை தன் கைகளால் மறைத்துக் கொண்டார். தன் தந்தையின் மறைவுக்கு கூட வர முடியாமல் , ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் முகமது சிராஜின் அர்ப்பணிப்பு உணர்வை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Comments