திருமண மண்டபத்துக்கு வந்த காதலி ; மாயமான மணமகன்! - திடீர் மாப்பிள்ளையான பஸ் கண்டக்டர்

0 16022

காதலி மிரட்டியதால் மாப்பிள்ளை மாயமாகி விட, திருமணத்துக்கு வந்த பஸ் கண்டக்டர் திடீர் மணமகனான சம்பவம் கர்நாடகத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தை சேர்ந்த நவீனுக்கும் சிருங்கேரியை சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமணம் சிருங்கேரியில் கடந்த 5 ஆம் தேதி நடைபெறவிருந்தது. நவீன் ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நவீனுக்கு திருமணம் நடப்பதை அறிந்த அந்த பெண் நேரடியாக திருமண மண்டபத்துக்கே வந்து விட்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக காத்திருந்த அந்த பெண் நவீனை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது, என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையை கூறி உன் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார். இதனால் , பயந்து போன நவீன் யாரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

இந்த நிலையில் , காலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தனர். தாலி கட்டும் நேரம் வந்தும் மணமகன் நவீன் மேடைக்கு வரவில்லை. மணமகள் மட்டும் தனியாக இருந்தார். அப்போது தான் மணமகன் நவீன், திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.


இதனால் , இருவீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்து நின்றனர். மணப்பெண் கண்ணீர் விடத் தொடங்கினார். இதனால், திருமண மண்டபம் சோகமயமானது. இந்த சமயத்தில் திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரியை சேர்ந்த சந்துரு என்ற இளைஞர் தான் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக முன்வந்தார். இதற்கு, பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்க அதே மேடையில் சந்துரு- சிந்து திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை மனதார வாழ்த்தி வயிறு நிறைய விருந்து உண்டு சென்றனர். திடீர் மாப்பிள்ளையான சந்துரு, சிக்கமகளூருவில் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments