மதுராந்தகம் : வெளியே தெரிந்த வால்; தப்பித்த இளைஞர்!
மோட்டார் சைக்கிளில் பாம்பு பதுங்கியிருப்பதை தக்க சமயத்தில் கண்டுபிடித்ததால், இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, மழை காலமென்பதால் இரு சக்கர வாகனங்களில் விஷ ஜந்துக்கள் பதுங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் செங்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் முப்புடாதி என்ற இளைஞர் சென்று கொண்டிருந்த போது நல்லபாம்பு கடித்தது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
பொதுவாகவே, மழைக்காலங்களில் இரு சக்கர வாகனங்களை நன்றாக சோதித்து பார்த்து விட்டு வண்டியை எடுப்பதே நல்லது. ஏனென்றால், அவற்றில் பாம்புகள், தேள்கள் ஏறி பதுங்கியிருக்கும் வாய்ப்பு அதிகம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் தனது இருச்சக்கர வாகனத்தை தன் வீட்டின் அருகே இரவு நிறுத்தி வைத்திருந்தார்.
காலை வேலைக்குச் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துள்ளார். வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு பெட்ரோல் டேங்கை திறப்பதற்கு முயற்சி செய்யும்போது இருக்கைக்கு கீழே பாம்பு வால் ஒன்று தெரிந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அருண், வண்டியை திறந்தவெளி பகுதிக்கு தள்ளி சென்று மெக்கானிக்கை வரவழைத்தார். தொடர்ந்து, மெக்கானிக் வாகனத்தின் ஒவ்வொரு பாகமாக பிரித்தார். அப்போது வண்டியில் இருந்து 3 அடி நீளம் நல்ல பாம்பு சீறிக் கொண்டு வெளியே ஓடியது.
சீறிப் பாய்ந்த நல்ல பாம்பு அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி மறைந்து போனது. மழை காலத்தில் இரு சக்கர வாகனங்களை எடுக்கும் போது, கவனத்துடன் செயல்படுவது நல்லது.
Comments