இலங்கை அதிபர், பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு... தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவையும் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். தமிழர்களுக்கு சம உரிமை, 13வது சட்டத் திருத்தம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அவர் சந்தித்துப் பேசியபோது, மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமநீதியும் சம உரிமையும் கிடைக்கும் வகையில் , 13வது பிரகடனத்தை நடைமுறைப்படுத்த இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
சொந்த நாட்டின் நலன்களுக்காக அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் விரைவில் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி விநியோகத்திலும் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இந்தியா சார்பில் அவர் உறுதி அளித்தார்.
Comments