காதல் பட பாணியில் ஒரு நிஜ சம்பவம்..! இளைஞர் அடித்துக் கொலை

0 11299
கரூர்: காதலை கைவிட மறுத்ததால், பட்டப்பகலில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

கரூரில் காதலை கைவிட மறுத்த சலூன் கடைக்காரர் மகன், நடுரோட்டில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியை காதலித்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இத்தனை நண்பர்கள் இருந்தும் காப்பாற்ற முடியவில்லையே என்று பெற்ற தாயை கண்ணீர் விட்டு கதறும் நிலைக்குத் தள்ளிவிட்டு சென்ற ஒரு தலைக்காதல் ஹரிஹரன் இவர்தான்..!

கரூர் காமராஜ் சாலையில் சலூன் கடை நடத்திவரும் ஜெயராமின் மகன் ஹரிஹரன், பழைய இரும்பு பேப்பர் மொத்த வியாபாரம் செய்யும் வேலன் என்பவரின் பள்ளி செல்லும் வயதுடைய மகளை கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்ததால் மேல் படிப்பை காரணம் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா கால விடுமுறையில் வீட்டில் உள்ளவர்கள், மாணவிக்கு தகுந்த அறிவுரை வழங்கி மெல்ல மெல்ல காதலை மறக்க செய்ததாக கூறப்படுகின்றது.

கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள அந்த மாணவி, கல்லூரிக்கு செல்ல தொடங்கிய 2 மாதமாக ஹரிஹரனுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

ஆனால் ஹரிஹரன் விடாமல், மாணவியை விரட்டி விரட்டி பேச முயன்றதாக கூறப்படுகின்றது. இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதன்கிழமை அங்குள்ள கோவிலுக்கு வருமாறு ஹரிஹரனை மாணவியின் தந்தை அழைத்துள்ளார். தனது மகளை விட்டுவிடுமாறு ஹரிஹரனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தங்கள் பெண் சின்னவள், அவள் இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது என்று கூறி அவளை இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பெண்ணின் தந்தை வேலன் பக்குவமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் ஹரிஹரன் காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சங்கர் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் ஹரிஹரனை பிடித்து சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர்.

பலர் தடுத்தும் கேட்காமல் சங்கர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஹரிஹரனை குத்தி, சாலையில் போட்டு மிதித்ததாக கூறப்படுகின்றது.

பட்ட பகலில் பலபேர் முன்னிலையில் நடந்த எதிர்பார்க்காத தாக்குதலால் நிலைகுலைந்த ஹரிஹரானால் தப்பிக்க இயலவில்லை. இந்த தாக்குதலில் உடன்பாடில்லாத மாணவியின் உறவினர்கள் சிலர் ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உறவினர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பள்ளி செல்லும், தங்கள் வீட்டு பெண்ணின் மனதை கெடுத்து காதலில் விழவைத்ததோடு, அவள் மறந்த பின்னரும் அவளை தொடர்ந்து சென்று காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்ததால் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் பெரியாப்பா சங்கர், தாய்மாமன் கார்த்திகேயன், மாமா வெள்ளச்சாமி ஆகியோரை கைது செய்தனர் , தந்தை வேலன், சித்தப்பா முத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவியுடனான, பொறுப்பற்ற காதல், ஹரிஹரனின் உயிரிழப்புக்கு காரணமாகி அவனது தாயை கண்ணீர் விட்டு கதறவைத்திருப்பது சோகத்திலும் சோகம்

மாணவியின் உறவினர்கள் அவசர புத்தியால் கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதனிடையே  காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலியின் தந்தை மற்றும் சித்தப்பாவை கைது செய்துள்ள போலீசார் அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காதலியின் தந்தை வேலன் நடத்தும் இரும்பு கடைக்கு சென்ற மர்ம கும்பல் அவரது கடையை அடித்து நொறுக்கியதோடு, கடையின் முன்பாக டயரை கொழுத்திவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் இளைஞன் கொலைக்கு காரணமான காதலியையும் கைது செய்ய கோரி கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் கரூர் - திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments