அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்... போலீசார் துப்பாக்கிச் சூடு

0 3947

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ஏற்க டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர்.

அதேநேரத்தில், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோ பைடனின் வெற்றியை ஏற்க முடியாது என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் கட்டடத்துக்கு வெளியே கூடியிருந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நேரம் செல்லச் செல்ல அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல்பகுதியில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேநேரத்தில் கட்டடத்தின் உள்ளே தேர்வாளர் குழுவினர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்தவர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர்.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. துணை அதிபர் பென்ஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றக் கட்டடம் அருகே வெடிபொருள் சிக்கியதால் பரபரப்பு நிலவியது. 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ள போலீசார் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதி காக்கும்படி அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், பைடன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் விரட்டியடித்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கவலை தெரிவித்துள்ளார். இந்த கலவரமும், வன்முறையும் தமக்கு கவலை அளிப்பதாக டுவிட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள மோடி, சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் அது நிலைகுலைந்துவிடக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments