பள்ளிகளை திறக்கலாமா.... பெற்றோர்கள் கூறுவது என்ன?

0 6268

பொங்கல் பண்டிகைக்கு பின், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது

10, 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. வருகிற 8-ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பதில் எந்த தவறுமில்லை, கட்டாயம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்கின்றனர் சில பெற்றோர்

பொதுத்தேர்வை எதிர்கொள்ள விருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயில்வது மட்டும் போதுமானதாக இருக்காது என்றும், பள்ளிக்கு சென்று படித்தால் தான் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் ஒரு சில பெற்றோர் யோசனை கூறியுள்ளனர். பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவினால், சிறப்பு வகுப்பாவது நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேசமயம், கொரோனா உருமாறியுள்ள சூழலில், பள்ளிகளை திறப்பது தவறான முடிவு என சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அசாதாரண சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பமில்லை என்றும், பொதுத்தேர்வை ஆன்லைனிலேயே நடத்த அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும், பாடம் நடத்த ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் கூறுகிறார் அசோக் நகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை

பெற்றோர்களின் கருத்துக்களை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments