குழந்தையின் தொண்டையில் சிக்கிய நிலக்கடலை ...6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்!

0 4005

சேலத்தில் நிலக்கடலை தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள தோராமங்கலத்தில் வெங்கடேசன்-பழனியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதீப் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.2 நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பிரதீப் , கீழே கிடந்த  நிலக்கடலையை விழுங்கிவிட்டான். அதன்பின்,  மூச்சுவிட முடியாமல் குழந்தை அழ தொடங்கியுள்ளான். 

இதனை கண்ட பெற்றோர் , குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகும் குழந்தை அழுதுகொண்டே இருக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் டீன் பாலாஜி நாதன் மேற்பார்வையில் சிறுவனை காப்பாற்ற தனி மருத்துவக குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான அதிநவீன டெலி ப்ராங்கோஸ் கோபி கருவிக்கொண்டு குழந்தைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது. 


இதனால் குழந்தை பிரதீப்பின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மருத்துவ குழுவிற்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து டீன் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' கொரோனா காலத்தில் மட்டும் பிரதீப் போன்று நாணயங்கள், நிலக்கடலை,  புளியங்கொட்டை போன்றவற்றை விழுங்கிய 23 குழந்தைகளை சேலம் அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். இது போன்ற சமயத்தில் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டால், எளிதாக காப்பாற்றி விடலாம் என்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments