வலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு... உடனடியாக கடலுக்குள் விட்ட மீனவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் கிராமத்தில் மீனவர்கள் விரித்த வலையில் கடல் பசுவை மீட்ட மீனவர்கள் உரிய சிகிச்சையளித்து கடலுக்குள் மீண்டும் விட்டனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கப்பகுதியாக திகழ்கிறது. மன்னார்வளைகுடாவில் மட்டும் 3, 600-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. அழியும் தருவாயில் உள்ள அரிய வகை உயிரினங்களும் மன்னார் வளைகுடாவில் வசிக்கின்றன. அவற்றில் கடல் பசுக்களும் ஒன்று. பாண்டா கரடிகள் அரிய வகை மூங்கில்களை உண்டு உயிர் வாழ்வதை போல கடலில் இயற்கையாக வளரும் அரிய வகை புற்களை உணவாக உட்கொண்டு கடல் பசுக்கள் உயிர் வாழ்கின்றன.
தற்போது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200-க்கும் குறைவான கடல் பசுக்களே உள்ளன. இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் பணிகளில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடலில் கடல்பசுக்கள் விரும்பி உண்ணும் புற்களை வளர்க்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் விரித்த வலையில் அழகிய குட்டி கடல் பசு சிக்கியது. உடனடியாக, வலையில் இருந்து கடல் பசுவை மீட்ட மீனவர்கள் அதனை ஆசுவாசப்படுத்தி மீண்டும் கடலுக்குள் விட்டனர். தொடர்ந்து, கடல் பசு துள்ளி குதித்தபடி கடலுக்குள் நீந்தி சென்றது. துரிதமாக செயல்பட்ட மீனவர்களை அதிகாரிகள் பாராட்டினர்.
Comments