ரூ. 20 -க்கு வேட்டி... தமிழர்களின் ஆடை கலாசாரத்தை ஊக்குவிக்கும் ஜவுளிக்கடை!

0 6921

இன்று சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள துணிக்கடையில் 20 ரூபாய்க்கு வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.

வேட்டி என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வந்தாலும் தமிழர்கள் கட்டும் வேட்டிக்கு என்று ஒரு தனி மவுசு உள்ளது. வேட்டி தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். விழாக் காலங்களில் வேட்டியை மடித்து கட்டி மீசையை முறுக்குவது தமிழர்களுக்கே உரித்தான செயல். ஆனால், அந்த பாரம்பரியம் தற்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே என்றும் அழைக்கின்றனர்.

கடல் தாண்டியும் கூட வேட்டி அணியும் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் வேட்டி அணிகிறார்கள். நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் ஆதிக்கத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளில் வேட்டிக்கு மவுசு குறைந்து விட்டது.

image

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ஒவ்வோரு ஆண்டும் சர்வதேச வேட்டி தினமாக கடைபிடிக்கப்படும் என்று யுனெஸ்கோ அறிவித்தது. வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், பெரும்பாலான இளைஞர்கள் வேட்டியை கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், தற்போது அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது. திருமணத்துக்கு அல்லது பண்டிகை தினங்களில் மட்டுமே இப்போது வேட்டி அணியும் பழக்கம் இருக்கிறது.

திருமணத்தில் கட்டுவதற்காக ஒட்டிக்கோ கட்டிக்கோ பட்டுவேட்டிங்கோ என்று ஆசையாய் வாங்குகின்றனர். திருமணத்தன்று மட்டும் வேட்டியை கட்டிவிட்டு அப்படியே மறந்துவிடுகின்றனர். பெண்களின் பட்டுப்புடவைகளை போல வேட்டிகளும் பீரோக்களில் உறங்க சென்று விடுகின்றன.

நிலைமை இப்படியிருக்கையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உதயா என்ற ஜவுளிக்கடையில் வேட்டி கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் வேட்டி தினத்தில் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த கடையில் 20 ரூபாய்க்கு வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று இருபது ரூபாய் பணம் கொடுத்து வேட்டியை வாங்கி செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments