24 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை... ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு!
கடந்த 24 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை புரிந்து ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து கவுரவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் என்றாலே மக்களிடத்திலிருந்து தனி மரியாதை கிடைக்கும். ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெறுபவர்களும் மிகுந்த கௌரவத்துடன் ராமநாதாபுர மாவட்ட கிராமங்களில் வாழ்வார்கள்.
நாட்டுக்கு சேவையாற்றி விட்டு ஓய்வு பெற்று ஊர் திரும்பும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பதும் ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், நாட்டுக்காக 24 ஆண்டுகள் சேவையாற்றி விட்டு ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
திருவாடானை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் தன் 21 வயதில் இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது, 45 வயதான அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். தன் பணிக்காலத்தில் இந்திய ராணுவத்தில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய அவர் தன் சொந்த ஊரான கடம்பாகுடி திரும்பினார். இதையடுத்து கடம்பாகுடி பேருந்து நிலையத்தில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடம்பாகுடி, கோனகிகோட்டை,திருவாடானை இளைஞர்கள் தரப்பில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது. ராணுவ உடையிலேயே வந்து இளைஞர்கள் அளித்த வரவேற்பை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments