ஆன்லைன் கடன்: சிக்கிய செல்போன் நிறுவனம்
ஆன்லைன் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய சீன கும்பல், பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் முறைக்கேடாக ஆயிரத்து 600 சிம்கார்டுகளை சென்னையில் இருந்து வாங்கி சட்ட விரோதமாக பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட்டிக்கு கடன் தரும் செல்போன் செயலிகளை உருவாக்கி அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து, நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.
இந்த மோசடி கும்பலின் பின்னணியில் சீனாவைச் சேர்ந்தவர்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெங்களூருவில் வைத்து சீனாவை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் மற்றும் பிரமோதா, பவான் ஆகிய 4 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகளை உருவாக்கி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்வதன் பின்னணியில் சீன கும்பல் தான் இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக பெங்களூருவில் தனியாக நிறுவனம் அமைத்து ஒரு அலுவலகத்திற்கு 150 -லிருந்து 250 பேர் வரை ஊழியர்களை மாதம் 8 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணியமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 10 நிறுவனங்களை தனித்தனியாக நடத்தி வந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். செயலி மூலம் கொடுத்த கடனை திரும்பப் பெற, வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இந்த ஊழியர்களுக்காக பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சென்னை கிளையில் சுமார் ஆயிரத்து 600 சிம் கார்டுகளை வாங்கி, சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரில் அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டு மொத்தமாக சிம்கார்டுகளை வழங்கும் முறையில் சீன மோசடி கும்பலுக்கு சிம் கார்டுகளை விற்றுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயலுக்காக, சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த சீன மோசடி கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் தலைமறைவாக இருப்பதாக கூறும் அவர்கள், கைதான 2 சீனர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Comments