2500 - 1000 = 1500 இது வேளாண் துறை போடும் வசூல் கணக்கு..! பொங்கல் பயனாளிகள் ஓட்டம்
திருக்கோவிலூர் அருகே, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் கடன் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, பொங்கல் பரிசுத் தொகையில் 1000 ரூபாய் பிடித்தம் செய்ததால், பயனாளிகள் ரேசன் கடையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கொல்லூர் கிராமத்தில் 856 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நியாயவிலைக்கடை முன்பு செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே ஏராளமானோர் முண்டியடித்தபடி வந்து 2500 ரூபாய் ரொக்கம் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பரிசை பெற்றுச் செல்ல காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த முகையூர் வட்டார வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள், அனைவரது குடும்ப அட்டையையும் வாங்கி வைத்துக் கொண்டு, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஏமாற்றி கடன் பெற்ற பயனாளிகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் பிடித்தம்போக 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
சிலருக்கு 1000 ரூபாய் பிடித்துக் கொண்டு மீதி 1500 ரூபாய் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்களை அழைத்து வந்து நியாயம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது
இதையடுத்து பொதுமக்களிடம் வாங்கி வைத்திருந்த ஸ்மார்ட் அட்டைகளை அவர்களிடம் கொடுத்த வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் கிசான் திட்டத்தின் கீழ் மோசடியாக பெற்ற பணத்தை திரும்ப வசூலிக்காமல் விடமாட்டோம் என்று எச்சரித்தனர்.
இதற்கிடையே ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்றிருந்த பயனாளிகள் பலர் , வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகளுக்கு பயந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என அங்கிருந்து மெதுவாக நழுவினர்.
Comments