சென்னையில் கனமழை வெள்ளக்காடாகிய சாலைகள்!

0 10113
சென்னையில் கனமழை வெள்ளக்காடாகிய சாலைகள்!

சென்னையில் அதிகாலை முதல் கருமேகங்கள் சூழ விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சாலைகள், பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் நள்ளிரவில் பரவலாக பெய்யத்தொடங்கிய மழை, அதிகாலையில் இருந்து கருமேகங்கள் சூழ கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது.

காலை நேரத்தில் பெய்த கனமழையால், பணிக்கு செல்வோர் அவதிக்கு ஆளாகினர். அண்ணா சாலை, காமராஜர் சாலை, எழும்பூர், வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். 

தொடர்மழை காரணமாக கிண்டி சர்தார் படேல் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மந்தைவெளி பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிததால், பயணிகள் அவதிக்கு ஆளாகினர். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள பிரதான சாலையான வால்டாக்ஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. கருமேகங்கள் சூழ்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் பட்டப்பகலிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.  

சென்னையில் காமராஜர் சாலையில் கருமேகங்கள் சூழ மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். கனமழையால், எழும்பூர் அடுத்த எத்திராஜ் கல்லூரி சாலை, கண் மருத்துவமனை சாலைகளில் தண்ணீர் தேங்கியது. 

தொடர் மழை காரணமாக ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கவிழ்ந்து கிடந்தன. சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தொடர் கனமழையால், கே.கே. நகரில் பிரதான சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்மழையால், கிண்டி கத்திபாரா உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் பகலிலும் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சென்றனர். 

வேளச்சேரி ராம்நகர் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். அதேபோன்று, சோதனை சாவடி பகுதியிலும் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சுமார் 10க்கும் மேற்பட்ட தெருக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீரோடு சேர்ந்து கழிவுநீரும் கலப்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

பல்லாவரம் அடுத்த ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனை ஜே.சி.பி. மூலம் சீரமைக்கும் பணியில் கொட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

சென்னையின் புறநகர் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், தாம்பரம் அடுத்த மணிமங்கலம் கஜலட்சுமி நகரில் வீடுகளை சுற்றியும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். 

தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு உருவாக வாய்ப்புள்ளதால, மழைநீரை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சிகிச்சைக்காக வரும் புற நோயாளிகள் பதிவு செய்யும் இடம் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ளதால் அந்த பகுதி மூடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதி என்பதால் இந்த பகுதிகளில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments