”தமிழ்க்கடவுளுக்கு உகந்த தைப்பூசம்” தமிழ் நிலத்திலும் இனி அரசு விடுமுறை..!
ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ள முதலமைச்சர், அந்த நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் நன்நாளில் எடுக்கப்படும் விழாவாகும். முருகன் பிறந்த தினமாகவும் அறியப்படுவதால், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும், அன்னதானம் வழங்குதலும் முருகன் கோவில்கள் தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளைப் போன்று தமிழகத்திலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, வரும் 28ம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூச நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Comments