தடுப்பூசி செலுத்திய பின்னர் பக்கவிளைவுகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் - மத்திய அரசு
தடுப்பூசி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், பக்க விளைவுகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க தடுப்பூசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சோதனைகள் முடிவதற்கு முன்பே அவசரகதியில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. கோவாக்சின் மருந்து சாதாரண தடுப்பு மருந்து போன்றது எனவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா, கோவாக்சின் தடுப்பு மருந்து என்றும், பேக் அப் மருந்து அல்ல என்று கூறியுள்ள அவர், தன்னார்வலர்களுக்கு பாரசிட்டமால் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தாங்கள் 200 விழுக்காடு நேர்மையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதாகவும், ஃபைசர் உருவாக்கிய மருந்தை விட கோவாக்சின் எந்த வகையிலும் தாழ்ந்ததல்ல என்றும் குறிப்பிட்டார். கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் உருவாக்கிய மருந்துகள் அவசரகால பயன்பாட்டிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments