கொச்சி - மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
கொச்சி - மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கும் இத்திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஒரு நாளில் 12 மில்லியன் மெட்ரிக் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்ல முடியும். கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்கள் வழியாக இந்த எரிவாயுக் குழாய் செல்கிறது. 3,000 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் மனித உழைப்பு நாள்களில் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட போதும் 2014-ஆம் ஆண்டுதான் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவது, வர்த்தகரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, அதிகவிலை கொடுத்து நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகள், பல்வேறு தரப்பு எதிர்ப்புகளைக் கடந்து இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் கர்நாடக, கேரள மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும். இந்த குழாய்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவும் விநியோகிக்கப்படும். சுத்தமான எரிபொருள் நுகர்வு, காற்று மாசுவை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments