'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை! '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்

0 1391092

செங்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடி மீண்ட இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த சொர்ணபூமி சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முப்புடாதி. இவர், இரு நாள்களுக்கு முன் தன் இரு சக்கர வாகனத்தில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வாகனத்தினுள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு ஒன்று முப்புடாதியின் காலில் கடித்து விட்டு மீண்டும் வண்டிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. உடனடியாக தன் தந்தை மற்றும் உறவினர்களுக்கு முப்புடாதி தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து , சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் இரு சக்கர வாகனத்தை பிரித்து பல மணி நேரம் போராட்டத்துக்கு பின் உள்ளே இருந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. 

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முப்புடாதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு நாள்களாக ஐ.சி.யூ வில் தீவிர சிசிச்சை பிரிவில் இருந்த முப்புடாதி உயிர் பிழைத்துக் கொண்டார். இதையடுத்து இன்று ஐ.சி.யூவில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து முப்புடாதியிடம் பேசிய போது, '' தற்போது மழைக்காலம் என்பதால் இருசக்கரவாகனத்தில் விஷ ஜந்துக்கள் குடியேற வாய்ப்பு உள்ளது. இருசக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வாகனத்தை நன்றாக முழுமையாக சோதனை செய்த பின்னரே ஓட்டுவது நல்லது. என் வாகனத்தில் பதுங்கியிருந்த நல்ல பாம்புவின் வால் பகுதி இரு சக்கர வாகனத்தில் பின்பக்க சக்கரத்தில்  சுற்றியிருந்துள்ளது. இதை கூட நான் கவனிக்கவில்லை. வண்டியை ஓட்டும் போது, அதன் வால் பகுதியில் அடிபட்டதால், அந்த வேகத்தில் என்னை கொட்டி விட்டது. உடனடியாக மருத்துவ உதவி கிடைத்ததால் நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்.. எனவே, இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்கு முன் தயவு செய்து நன்றாக சோதித்து விடுங்கள்'' என்று உருக்கமாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments